2023: ஒரு பின்னோக்கிய பார்வை

2023ஆம் இலங்கை எதிர்கொண்ட, நாட்டினுள் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை, ஆவணப்படங்களை, வீடியோ நேர்க்காணல்களை, புகைப்படங்களை ‘மாற்றம்’ தளம் வெளியிட்டிருந்தது. குறிப்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகள், அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நழுவல் போக்கு போன்றவை பற்றி குறிப்பிடலாம். அதேபோல 2023ஆம் ஆண்டு இலங்கை, 75ஆவது வருட சுதந்திர தினத்தை சந்தித்ததோடு, அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிகழ்த்தப்பட்ட – இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்காத கறுப்பு ஜூலை இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவையும் கண்டிருந்தது. இவை தொடர்பாக மாற்றுக் கண்ணோட்டத்தில் அணுகி மாற்றம் கட்டுரைகளையும் நேர்க்காணல்களையும் வெளியிட்டிருந்தது.

மலையகம் மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் நிறைவானதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தலைமன்னார் முதல் மாத்தளை வரையான நடைபயணமும் கடந்த வருடமே இடம்பெற்றிருந்தது. 12 நாட்களாக இடம்பெற்றுவந்த இந்த நடைபயணம் மற்றும் பிரகடனம் வெளியீடு தொடர்பான பதிவுகள் தொடர்ச்சியாக மாற்றம் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டு வந்தன. அத்துடன், 200 வருட நிறைவை முன்னிட்டு ஏராளமான கட்டுரைகளும் நேர்க்காணல்களும் வெளிவந்திருந்தன.

அதேவேளை, தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புகள், அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினர் அவற்றுக்கு அனுசரணை வழங்குவது தொடர்பிலும் மாற்றம் கடந்த வருடம் அவதானம் செலுத்தியிருந்தது. குறிப்பாக, குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலையை வைத்து சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை செயற்படுத்திவரும் தொல்பொருள் திணைக்களம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு, 2500 நாட்களுக்கும் மேலாக தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கில் போராடிக்கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுடைய உறவுகளின் குரல்களுக்கும் எப்போதும் போன்று மாற்றம் செவிசாய்த்திருந்தது.

பொருளாதார நெருக்கடி, உரிமை மறுப்பு, பொலிஸ் தடுப்பின் போதான மரணங்கள் மற்றும் அரசியல்வாதிகள், அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்வினையை, கருத்துப்பகிர்வை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அடக்கியொடுக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் 2023 கொண்டுவந்திருந்தது. பின்னர் சிவில் சமூகத்தினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மக்களது எதிர்ப்பின் காரணமாக அரசாங்கம் பின்வாங்கியிருந்தது. இது தொடர்பாகவும் மாற்றம் கவனம் செலுத்தியிருந்தது.

2023 மாற்றம் தளத்தில் வெளிவந்திருந்த கட்டுரைகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

மலையகம் 200: சில அவதானிப்புகள்

200 வருட வரலாற்றை நினைவு கூரும் தருணத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை இலங்கை சமூகத்தில் பெரிதும் அறியப்பட்ட ஒன்றாக காணப்படுகிறது. அரசியல் மற்றும் சிவில் சமூக மட்டத்தில் இது பேசப்படுகிறது. இவை முற்போக்கான அபிவிருத்தியாகும். மலையக மக்கள் தமது பிரச்சினைகளை, உரிமை மறுப்புகளை, கோரிக்கைகளை எல்லா இடங்களிலும் அச்சமின்றி முன்வைக்கின்றனர். இது குறித்து வாதபிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. ஏனைய சமூகங்களில் காணப்படும் முற்போக்கான சக்திகள் மலையக சமூகம் தொடர்பான கரிசனைகளைத் தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகின்றன. அத்துடன், இம்மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளனர். இவை சாதகமான அபிவிருத்தியாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் (சிங்கள -பௌத்த அடிப்படைவாதிகள்) மலையக மக்கள் தொடர்பாக ஒரு வகையான எதிர்ப்புணர்வு காணப்படுகின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும். இது இந்திய எதிர்ப்புவாதத்துடன் தொடர்புபட்டிருக்கிறது. இதனை மலையக மக்களுக்கான காணியுரிமையினை கோரும் போது அவதானிக்க முடியும். முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

(VIDEO) | “அந்தப் புளிய மரத்துக்கடியில வச்சிதான் என்ட மனுசன குடுத்தனான்…”

“ஒரு பெரிய புளிய மரமொன்று இருந்தது. அந்த இடத்தில இருந்துதான் சரணடையச் சொல்லி எலவுன்சிங் செய்தவ. பெரிய பனக்கூடலும் இருந்தது. அந்த இடங்களல்ல வச்சிதான் எங்கள பதிவு செய்தவங்க, அவர தனியா ஒரு பனக்கூடல் ஒன்டுக்க இருத்தி வச்சவ. அந்த இடத்தில் இன்னும் 50 பேர் அளவுல இருத்தி இருந்தவ. இப்போவும் அந்தப் புளிய மரமும் பனக்கூடலும் இருக்கு. இந்த வழியால பஸ்ல, பைக்ல போகேக்க நினைக்கிறனான், அந்தப் புளிய மரத்துக்கடியில, பனக்கூடலுக்குள்ளதானே என்ட மனுஷன குடுத்திட்டு போனனான் என்டு.” என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் சச்சிதானந்தம் பத்மரஞ்சனி பற்றிய முழு வீடியோ பதிவையும் முழுமையாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் 13 என்று சொல்வதை தவிர்த்த ஜனாதிபதி

13ஆவது திருத்த நடைமுறைப்படுத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தனது இரு உரைகளிலும் தவிர்த்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஜனாதிபதி நடந்துகொண்டார். அரசியலமைப்பில் மூன்றரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இருந்து வரும் திருத்தம் ஒன்றின் நடைமுறைப்படுத்தல் பற்றி, (ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாது என்பதை தவிர மற்றும்படி எதையும் செய்வதற்கு சகல அதிகாரங்களையும் கொண்டது என்று முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வர்ணித்த) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இன்று இருப்பவரால் பேசமுடியாத அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை!

இலங்கையில் நிகழும் சம்பவங்களுக்குப் பதிலடியாக தமிழ் இளைஞர்கள், தமக்குத் தோல்வியை எடுத்து வந்த வாக்குச் சீட்டுக்களுக்குப் பதிலாக ஆயுதங்களை ஏந்தத் தொடங்கினார்கள். தீவிரவாத தமிழ் இளைஞர்களின் நோக்கம் தாம் உள்ளாக்கப்பட்டிருந்த பாரபட்ச நிலையிலிருந்து தமது மக்களை விடுவிப்பதாகவே இருந்து வந்தது. சமூகங்களை இன, மொழி மற்றும் சமயப் பிரிவினைகளின் அடிப்படையில் பிரித்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுப்பதில் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை/ ஸ்ரீலங்கா தோல்வியடைந்திருந்த நிலைமை காரணமாகவே தமிழ் இளைஞர்கள் அவ்விதம் ஆயுதம் ஏந்தியிருந்தார்கள். முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

மலையக மக்களின் காணி உரிமை மறுப்பு: சில கேள்விகள்

1. மனிதர்கள் காலடிபடாத காடுகளை அழித்து பெருந்தோட்டங்களை உருவாக்கி பேணி இந்நாட்டின் நவீன பொருளாதாரத்திற்கு தமது உழைப்பை வழங்கிய மக்களுக்கும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் காணியை சட்ட ரீதியான உரித்துடன் வழங்கி இதர உரிய வசதிகளுக்கான காணிகளுடனான குடியேற்றங்களை அமைத்து கிராமங்களை உருவாக்கும்படி அரசாங்கத்தை கோருவதற்கு மலையக தலைமைகளுக்கு ஏன் இத்தனை தயக்கம்?

2. காடுகளை அழித்து மனிதர்கள் வாழக்கூடிய பல ஆயிரம் ஹெக்டயர் காணிகளை உருவாக்கிய மலையக மக்களுக்கு வீட்டுரிமைக்காகவும் தொழில் உரிமைக்காகவும் காணி உரிமையை பாரட்சமின்றி வழங்க அரசாங்கத்தை கோருவதற்கு மலையக தலைமைகளுக்கு எது தடையாக உள்ளது?

3. 200 வருடங்கள் கடந்தும் இந்த பாரபட்சங்கள் ஓரங்கட்டல்கள் தொடர வேண்டுமா? முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

குருந்தூர் மலை: 1956 ஐ நோக்கிய பாதை?

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சாதாரண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், காணிப் பசியில் இருந்து வரும் அரசியல் பிக்குகளின் அடாவடித்தனங்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தகைய நிவாரணங்களும் இல்லாமல் இருந்து வருகின்றார்கள். வறியவர்களாகவும், எத்தகைய தொடர்புகளும் இல்லாதவர்களாகவும் இருந்து வரும் மண்ணின் மைந்தர்களான இந்த மக்களுக்கு வேறு போக்கிடமில்லை. துன்பத்திலும், வெறுப்பிலும் அமிழ்வதைத் தவிர அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்? அவ்விதம் கையறு நிலைக்குத் தள்ளப்படுவது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை. இன்றைய அரசியல் பிக்குகள் தமது புவியியல் ரீதியான சிங்களம் மட்டும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்த விதத்தில் அடுத்தக் கட்ட மோதல்களுக்கான விதைகளை தூவி வருகின்றார்கள். அவர்களுடைய முன்னோர்கள் 1956இல் சிங்களம் மட்டும் கொள்கையின் மூலம் செய்த அதே காரியத்தை இவர்கள் இப்போது செய்து வருகின்றார்கள். முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

(VIDEO) கொடூரச் சட்டத்தில் சிக்குண்டு 71 வயதில் விடுதலையான செல்வரத்தினம்

“தம்பி, என்னை ரெண்டு தரம் பிடிச்சவங்க. முள்ளிவாய்க்கால் வழியா இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு போய் முகாமல்ல இருந்தப்போ ரி.ஜ.டி. ஆக்கள் என்னை பிடிச்சவங்க. இரண்டு நாள் விசாரணை முடிஞ்ச பிறகு விட்டவங்க. நான் இயக்கத்துல எந்த பிரிவிலயும் எந்த வேலையும் செய்ததில்ல. அவங்க (விடுதலைப் புலிகள்) பங்கர் வெட்ட கூப்புடுவினம். அதுக்குப் போய் உதவி செய்திருக்கன். அவ்வளவுதான். முகாம்ல இருந்து இங்க வீட்டுக்கு வந்த பிறகு வெள்ளை வான் ஒன்டுல ரி.ஐ.டி. ஆக்கள் வந்தவங்க. திரும்பவும் விசாரிக்கனும் என்று கூட்டிட்டுப் போனவங்க 12 வருஷம் கழிச்சுத்தான் விட்டவங்க. 58 வயசுல போய் 70 வயசுல வெளியில வந்திருக்கன் தம்பி. எந்தக் குற்றச்சாட்டும் என் மீது சுமத்தல.” பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட செல்வரத்தினுடனான நேர்க்காணலை முழுமையாகப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……!

ஆர்ப்பாட்டக்காரர்கள் தன்னை பதவி விலகுமாறு கோரியபோது 69 இலட்சம் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான தான் எதற்காக சொற்ப எண்ணிக்கையானவர்களின் வற்புறுத்தலுக்காக பதவி விலகவேண்டும் என்று கேட்டவர் இந்த கோட்டபாய. ஆனால், இறுதியில் கிளர்ச்சியில் இறங்கியவர்கள் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த மக்களே என்பதை ஒத்துக்கொள்கின்ற அளவுக்காவது அவரிடம் ஒருவித ‘நேர்மை’ இருந்திருக்கிறது. கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

“வடக்கு வந்த மலையக மக்கள், பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை”

வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள், இங்கு பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை. நடந்துமுடிந்த ஈழப்போராட்டத்தில் அதிகளவில் மலையகத்தைச் சேர்ந்தவர்களே பங்கெடுத்திருந்தார்கள். அந்த மக்கள் ஏன் போராடினார்கள்? தமிழ் மக்களின் பொதுவான ஒரு கொள்கைக்காக வேண்டித்தான் அவர்கள் போராடினார்கள். மலையக மக்கள் வேறு, பூர்வீக மக்கள் வேறு, யாழ்ப்பாண மக்கள் வேறு என்று பார்க்கவில்லை. இப்போதும் கிளிநொச்சியில் மலையக மக்கள் செறிந்துவாழும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றால், முன்னாள் போராளி ஒருவரைப் பார்க்கலாம். இல்லையென்றால் போராட்டத்தில் பங்கெடுத்து வீரச்சாவடைந்தார் என்று கூறுவார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டுவிட்டார் என்று கூறுவார்கள். மு. தமிழ்செல்வனின் முழுமையாக நேர்க்காணலை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

(VIDEO) “சிங்கள தேசியவாதத்துக்கான பதில் இந்துத்வாவாக​ இருக்கத்தேவையில்லை”

“அரசாங்கத்தின் சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒரு அமைப்பாகத்தான் இந்த தொல்பொருள் திணைக்களம் இன்று செயற்பட்டு வருகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை மிக மோசமாக இருக்கும்போது தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை வடக்கு கிழக்கில் முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் இயல்பாகவே தமிழர்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை தென்னிலங்கை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஊதிப்பெருப்பித்து உண்மையான வரலாறையும் முழு பின்னணியையும் கூறாது தமிழர்கள் பெளத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார்கள் என்று இனவாதத்தைப் பரப்புவார்கள்." யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கனின் முழுமையான நேர்க்காணலை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை; அரசாங்கத்துக்கும் ஆட்சிமுறைக்கும் அமிலப்பரீட்சை

ஒருவரை எது ஒரு குடிமகனாக்குகிறது? ‘மக்களின் அதிகாரம் தான் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது’ என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், மக்களைப் பொறுத்தவரை அரசு எங்கே இருக்கிறது? மட்டக்களப்பின் இந்த கால்நடை வளர்ப்பாளர்களின் அவலத்துக்கு அரசே பொறுப்பு. அரசின் ‘ராடருக்குள்’ அவர்கள் இல்லை என்றே தெரிகிறது. இந்த மக்களின் உயிர்களும் சக்தியும் நம்பிக்கையும் போகும்போது அவர்கள் என்ன ஒரு பெரிய எடுப்பிலான இறுதிச் சடங்கிற்காகவா காத்திருக்கிறார்கள்? கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

மலையகத் தமிழர் இன அடையாளமும், மலையகம் 200 ஆண்டு நிகழ்வும்

இம்மக்கள் மற்றவர்களின் உழைப்பில் வாழ வரவில்லை. மாறாக உழைத்து கொடுக்க வந்தவர்களாகவே வாழ்ந்துள்ளனர். இவர்களின் வரவு என்பது வரலாற்றில் நிகழக்கூடாத ஒரு விபத்தாகும். காரணம் மனிதர்களாக இங்கு இவர்கள் நடத்தப்படவில்லை. இந்நாட்டு வளர்ச்சிக்காகவே பல தலைமுறையினரை இம்மண்ணில் உரமாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை. இம்மக்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் யதார்த்த நிலைக்கு மாறானது. ஒரு சமூகத்தின் தன்மானம் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக்கப்படும் நிலை மாறவேண்டும். கட்டுரையை முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்.